Wednesday, February 17, 2010

தொடர்ந்து உள்ளே பாருங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடலாம் - நித்யானந்தர்

தொடர்ந்து உள்ளே பாருங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடலாம்
- நித்யானந்தர்


ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய இழப்பு என்னவென்றால், தனக்குள் ஒரு ஐந்து நிமிடம், அமைதியாக உட்கார முடியாமல் இருப்பதுதான். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள், நீங்கள் உங்களோடு உட்காருவது என்கின்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது.


ஏதாவது ஓய்வு வந்ததென்றால், உடனே வீட்டில் போய் படுக்கையில் சாய்கிறீர்கள்.

படுக்கையில் விழுந்த உடனே, முதலில் செய்கின்ற வேலை என்னவென்றால், ரிமோட்டைத் தட்டுவது. அந்த ரிமோட்டைத் தேடி எடுத்துக்கொண்டுதான் படுக்கையிலேயே உட்காருகின்றோம்.

ஒரு வேளை கரண்ட் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்க முடியவில்லையென்றால் என்ன செய்வோம்...? பழைய செய்தித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, முதல் வரியிலிருந்து கடைசி வரி வரைக்கும் அதையே புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்போம். எடிட்டர் கூட அப்படிப் படித்து இருக்க மாட்டார்கள். அப்படி படிப்போம். கோர்த்துப் படிப்போம்.

கோர்த்துப் பார்ப்பதை விட்டுவிட்டு எந்த எண்ணம் வந்தாலும், கடந்த கால அனுபவத்தோடு கோர்த்துப் பார்க்காமல் அப்படியே தளர்வாகப் பாருங்கள்.

"போரடிக்குதா?
சரி அடிக்கட்டும்.
வேறு என்ன செய்ய முடியும்?"

"இப்போது இப்படித்தான் இருக்கும்" என்று எந்த எண்ணம் வந்தாலும் கோர்த்துப் பார்க்காமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருங்கள். என்ன நடந்தாலும் சரி. நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்குள்ளே வலி இருந்தாலும், ஒரு வித மந்தத்தன்மை இருந்தாலும், வேறு ஏதாவது துக்கம் இருந்தாலும், என்ன இருந்தாலும் சரி, உங்களுடைய உடல் ரீதியான, மன ரீதியானப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சரி.

உதாரணத்திற்கு...

முட்டி வலி என்றால், இப்போது "வலி இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது?" என்று ஆழ்ந்து பாருங்கள். நேற்று இருந்த முட்டி வலி வேறு, நேற்று முன்தினம் இருந்த முட்டி வலி வேறு, அதற்கு முன்பு இருந்த முட்டி வலி வேறு. இதெல்லாம் தனித்தனியான அனுபவங்கள். அதைக் கோர்த்துப் பார்த்து இப்பொழுது இருக்கின்ற 'முட்டி வலிதான்' அது என்று நினைக்காதீர்கள்.

இப்போது முட்டியில் என்ன நடக்கின்றது? என்று பாருங்கள்.

ஒரு சின்னக் குழந்தைக்கு ஒரு ரோஜப்பூ கிடைத்தால் எப்படிப் பார்க்கும், புதிதாக மலர்ந்து பார்க்கும். அதுபோல் புதுமையோடு பாருங்கள். வலி இருக்கின்ற இடத்தைப் பாருங்கள். உடல் வலியாக இருந்தாலும், மன வலியாக இருந்தாலும், புதிதாகப் பாருங்கள்.

அந்த எண்ணத்தைக் கோர்த்துப் பார்க்காமல் "என்ன நடக்கின்றது?" என்று உற்றுப் பாருங்கள்.

ஒரு சின்ன நுட்பம். இது ஒரு அருமையான நுட்பம்.

இப்போதே, ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பாருங்கள். மனதிற்குள்ளே எந்த எண்ணம் வந்தாலும், வலியோ, வேதனையோ, துக்கமோ, சந்தோஷமோ, சாந்தமோ என்ன வந்தாலும், "என்னதான் நடக்கின்றது?" என்று அமைதியாகப் பாருங்கள்.

கண்களை மூடி நிமிர்ந்து அமருங்கள்!

எவ்வளவு நேரம் முடிகின்றதோ, அவ்வளவு நேரம் முயன்று பாருங்கள்...

இந்த சிறிய செயலைத் தொடர்ந்து செய்தினாலேயே, அந்த அசுர மனதை எளிதில் மாய்த்துவிடலாம். ஜீவன் முக்தியைத் தொட்டு விடலாம். எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமல் வாழ்வதுதான் ஜீவன் முக்த நிலை.

2 comments: