Saturday, January 30, 2010

ஓஷோ

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம்.

அவர் பல்கலைக்கழகத்திலே படிச்சு கிட்டிருந்தபோது மாணவர்களுக்கான சாரணர் அணியிலே சேர்ந்திருந்தார். பயிற்சி கொடுக்கிறபோது சார்ஜன்ட், “லெப்ட் டேர்ன் ரைட் டேர்ன்” அப்படீன்னு சொல்லுவார். எல்லா மாணவர்களும் திரும்புவாங்க. ஓஷோ திரும்பமாட்டார்.
சார்ஜண்ட் வந்து கேட்பார் “ஏன்? காதிலே ஏதும் கோளாறா” அப்படீன்னு. ஓஷோ சொன்னார், “காதிலே எந்தக் கோளாறும் இல்லை. இடது பக்கமோ வலது பக்கமோ எதுக்காகத் திரும்ப னும்ணு யோசிச்சேன், அதனால திரும்பலை” அப்படீன்னு.
நான் பொதுவாச்சொல்றேன், ஒரு சிந்தனையாளர் – எதிர் காலத்திலே ஞானியாக மலரப் போகிறவர் – சாரணப் பயிற்சியிலே வெற்றி பெறலை. அவருக்குப் பொருந்தாத துறையிலே சாதிக்கணும்னு அவர் நினைக்கலை.
இன்னைக்கு என்ன நடக்குது? ஏதாவது ஒரு துறையிலே முயற்சி செய்து தன்னால அதில் ஈடுபட முடியாதபோது, ஒண்ணு, மன உறுதியோடு மறுபடியும் முயற்சி செய்து ஜெயிக்கலாம். இல்லை, மனசு ஒத்து “இது நம்ம துறை இல்லை”, அப்படீன்னு முடிவு பண்ணி நகர்ந்துடலாம்.
ஆனா, சிறிசா ஏற்படற தோல்வியை ரொம்பப் பெரிசா எடுத்துட்டு, நாம எதுக்குமே பொருந்தவில்லை போலிருக்கு அப்படீன்னு பலபேர் நினைச்சுடறாங்க?
நான் பொதுவாச் சொல்றேன், ஒரு விஞ்ஞானி கவிஞராக முயற்சி செய்தால் அந்தப் பரிசோதனை தோல்வியிலே முடியும். ஒரு கவிஞன் விஞ்ஞானியாக முயற்சி செய்தால் அதுவும் பாதியிலே திசை திருப்பும். (அப்படி ஒரு கவிஞர் பாதியிலே விஞ்ஞானப் படிப்பை விட்டு வெளியேறி, பிறகு தமிழ் படிச்சு இப்ப ரொம்பப் பிரபலமா இருக்கார். யார்னு சரியா எழுதற முதல் மூன்று வாசகர் களுக்கு, அந்தக் கவிஞருடைய புத்தகம் பரிசாக அனுப்பப்படும்)
அதனாலே, எல்லோரும் எல்லாமும் ஆக முயற்சி செய்யாம, தங்கள் தனித்தன்மை என்னான்னு தெரிஞ்சு அந்தத் துறையிலே சிறந்து செயல்பட எல்லா முயற்சியும் எடுத்துக்கணும்.
“எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது” அப்படீன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு.
நான் பொதுவாச் சொல்றேன், நாம் எதை விரும்ப றோமோ அதை ரசிச்சு செய்கிறபோது அந்த வேலை ஒரு சுமையாத் தெரியாது. சுகமாத் தெரியும். அதை விட்டுவிட்டு, வராத துறையிலே முயற்சி செய்து தன்னைத் தானே எதற்கும் உதவாத ஆள்னு முடிவு செய்யறது ரொம்ப தப்பு.
நம்ம வாழ்க்கையிலே நடக்கிற சம்பவங்கள் ஒவ்வொண்ணும் மறந்து போறதுக்காக இல்லை. திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து, அதிலே பயன்படக் கூடிய விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்றதுக்காகத்தான்.
ஓஷோவைப் பற்றி ஆரம்பத்திலே சொன்னேன். அவர் மகாத்மா காந்தியடிகளைப் பல இடங்களிலே மிகக் கடுமையா விமர்சனம் செய்திருக்கார் ஆனா, காந்தியடிகளுடைய சுயசரிதையைப்பற்றிச் சொல்கிறபோது. “இவ்வளவு வெளிப்படையா, தன்னைப் பற்றித் தானே விஞ்ஞானப்பூர்வமா ஆய்வு செய்து எழுதறது ரொம்ப கஷ்டம்” என்கிறார் ஓஷோ.
நான் பொதுவாச் சொல்றேன், எல்லா விஷயங்களைப் பற்றியும் நாம சரியா கருத்துச் சொல்வோம். நம்மைப் பற்றி தெளிவாக இருக்கறோமா? “என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க” அப்படீன்னு அடுத்தவர்களைக் கேட்போம் இது தேவையில்லை.
நம் பலங்களைப் புரிஞ்சுக்கறதும் நம் பலவீனங்களைப் புரிஞ்சுக்கறதும் தான் உண்மையிலேயே நம்மைப் புரிஞ்சுக்கறது!
நம்மை உணர்வதே உண்மையை உணர்வது
உண்மையை உணர்வதே உயர்வுகள் தருவது.

No comments:

Post a Comment