Saturday, January 30, 2010

ஓஷோ

ஓஷோ. உலகமெங்கும் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று.
“தத்துவங்கள்” என்றாலே, அவை தளர்ந்து போனவர்களுக்குத்தான் என்கிற தவறான கருத்தைத் தகர்த்து, வாழ்வியலின் வலிமையே தத்துவம் என்கிற புதிய பார்வையோடு எதையும் அணுகியவர். கண்டறியாதன காண்பதிலும், காட்டுவிக்கப்படாததைக் காட்டுவதிலும் நிகரற்று விளங்குகிறார் ஒஷோ.
ஆன்ம விடுதலை நோக்கியே அவரது வழிகாட்டுதல்கள் இருந்தாலும், நடைமுறை வாழ்வின் வெற்றிக்கும் ஓஷோவின் சிந்தனைகள் ஒளிபாய்ச்சக் கூடியவை.
கடந்த நூற்றாண்டின் மிகச்சரியான மனித ராகவும், மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப் படுபவராகவும் ஓஷோ விளங்கியதுதான் ஆச்சரியம்!
பாலியல் சார்ந்த கருத்துக்களில் அவரது, பார்வையை, தவறாகப் பொருள் கொண்டவர்கள் ஓஷோவை “செக்ஸ் சாமியார்” என்றார்கள்.
ஒருமுறை ஓஷோவிடம் ஒருவர் கேட்டார், “உங்கள் ஆசிரமத்தில் நீங்கள் ஒழுக்கத்தை போதிப்பதில்லையே? ஏன்?” என்று.
ஒஷோ சொன்னார், “பார்வை இழந்தவர் களுக்கு நான் கண்களைத் தருகிறேன். நீங்கள், ஏன் ஊன்றுகோல் தரவில்லை என்று கேட்கிறீர்கள்” என்று.
அறியாமை, ஆசை, கோபம், காமம் போன்றவை பார்வையை மறைத்திருக்கின்றன. “விழிப்புணர்வு” என்கிற வெளிச்சத்தைப் பாய்ச்சி விட்டாலே போதும், ஊன்றுகோல் எதற்கு? என்கிறார் ஓஷோ.
தன்னைப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த போதனைகள் தேவையில்லை. ஏனெனில், விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான்.
ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும் என்பதை, சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் பல்வேறு கோணங்களில் பேசி வருகிறார்கள். ஓஷோ இதனை மிக அழகான கதையின் மூலம் விளக்குகிறார்.
ஒரு போலிச்சாமியார் இருந்தார். அவரிடம், உண்மையான தேடலுள்ள சீடன் ஒருவன் வந்தான். “சுவாமி எனக்கு மந்திர உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டான். “என் பெயர்தான் மந்திரம் அதனை உளமார உச்சரித்தாலே நன்மைகள் நடைபெறும்” என்றார் சாமியார்.
கொஞ்சநாள் கழித்து நதிக்கரை பக்கமாகப் போனார் சாமியார். அங்கே ஒரே கூட்டம், ஒருவர் வந்து “சுவாமி உங்கள் சீடன் தண்ணீர் மீது நடக்கிறான்”, என்றார். ஓடிப்போய் பார்த்தார் சாமியார்.
சமீபத்தில் வந்த அதே சீடன் தான்! இவருக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அவன் கரைக்கு வந்ததும் தனியாக அழைத்துப் போய், “அதன் ரகசியம் என்ன? எனக்குக் கற்றுத்தரக் கூடாதா?” என்றார் சாமியார்.
சீடன் சொன்னான், “உங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே நடந்தேன் சுவாமி! வேறேதும் ரகசியமில்லை” என்றான். அதற்குள் கூடியிருந்தவர்கள், “சீடனுக்கே இவ்வளவு சக்தி என்றால், உங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கும்! நீங்களும் நதியில் நடந்து செல்லுங்கள் சுவாமி” என்று வற்புறுத்தி இழுத்துச் சென்றார்கள். தண்ணீரில் நடக்க முயன்று “தொப்” என்று விழுந்தார் சாமியார்.
சீடனை அழைத்துச் சொன்னார், “ஐயா! நான் ஒரு போலி! இத்தனை காலம் ஊரை ஏமாற்றியிருந்தேன். நீ தண்ணீரில் நடக்கக் காரணம் நானல்ல! உன் நம்பிக்கை” என்றார்.
இதைச் சொல்லிவிட்டு ஓஷோ அடுத்தாற்போல் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறார். “ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான்” என்கிறார்.
“வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்” என்று ஓஷோ சொன்னதன் உட்பொருள், மனிதன் சோகங்களுக்குள்ளும், குற்ற உணர்வு களுக்குள்ளும் அழுந்திவிடாமல், தன்னை உணர்ந்து, தன் இயல்பான தன்மையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற் காகத்தான்.
குற்ற உணர்விலிருந்து விடுபட்டால் மட்டுமே மனிதன் மிகச் சிறந்த தன்மைக்கு உயர்வான் என்பதை ஓஷோ உணர்ந்திருந்தார். அதனை வெறும் போதனையாக மட்டும் சொல்லாமல், அதற்கான கருவிகளாய் தியானம், நடனம் போன்றவற்றை வழங்கினார்.
காமம், கடந்து போக வேண்டியதே தவிர புறக்கணிக்கக் கூடியது அல்ல என்ற ஓஷோவின் கருத்து பிறழ உணரப்பட்டது. எனவே அவரை வேறு விதமாய் சித்தரிக்கப் பலரும் முனைந்தனர்.
மனிதன், நிகழ்காலத்தின் நிமிஷமாக வாழவேண்டும் என்பதை “ஜென்” வாழ்க்கை முறை விரிவாகப் பேசுகிறது. “ஜென்” முறை பற்றி ஓஷோ நிறையப் பேசியிருக்கிறார்.
எந்த ஒரு தத்துவத்தையும் அவர் பரிந்துரை செய்ததில்லையே தவிர, விழிப்புணர்வு, நிகழ் காலத்தின் நிமிஷமாக இருத்தல், போன்றவைதான் அவர் காட்டிய முக்கியமான வழிமுறைகள் என்று சொல்லலாம்.
ஒவ்வொரு சின்ன விஷயத்திலிருந்து, பெரிய சாதனைகள் வரையிலான அனைத்திற்குமே நிகழ் காலத்தின் நிமிஷமாய் இருத்தல் பொருந்தி வரும். விநாடிகளின் கனம், அதன் முக்கியத்துவம், ஆழம் போன்றவற்றை அறிந்தவர்களால் வினாடிகளை வீணடிக்க இயலாது. அத்தகையவர்கள் வாழ்க்கையில் தோற்பதும் கிடையாது.
கவித்துவம் ததும்பத் ததும்ப, முற்றிலும் வித்தியாசமான கோணங்களிலிருந்து வாழ்வின் நுட்பங்களை ஓஷோ உணர்த்துவார்.
வெற்றி பெற விரும்புகிறவர்கள், முதலில் தன்னை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது காலங்காலமாய் வலி
யுறுத்தப்படும் கருத்துதான். அதன் காரணத்தை ஓஷோ விளக்குகிறார்.
“தன்னுடன் பொருந்திவாழ முடியாதவனால் பிறருடன் பொருந்தி வாழ முடியாது. தன்னை நேசிக்காதவனால் பிறரை நேசிக்க முடியாது. அத்தகைய மனிதர்கள் பிறரை ஏமாற்றுவதும் பிறரிடம் ஏமாறுவதும் தொடர்ந்து நடைபெறும். இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறவை எல்லாம் முகமூடிகளே தவிர முகங்களல்ல. தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளித்துக் கொள்கிற மனிதர்கள் தங்கûளையே தொலைத்து விடுவார்கள்” என்று.
ஒஷோவின் தெளிவான பார்வை நமக்கு தெளிவைத் தரும் வாழ்வை முழுமையாக வாழும் உணர்வைத் தரும்.

No comments:

Post a Comment